தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் என்.எல்.சி (NLC) நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்க விரிவாக்கம் மற்றும் நிலக் கையகப்படுத்துதல் தொடர்பாகப் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசிய பேச்சு அரசியல் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சட்டப்பேரவையில் விவாதத்தின் போது உரையாற்றிய பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, “தமிழ்நாடு தற்போது மின்உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மின்மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளதால், இனி நமக்கு என்.எல்.சி நிறுவனம் தேவையில்லை” என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
மேலும், என்.எல்.சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR Fund) மூலம் கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடுப்பணைகளைக் கட்டி நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், சுரங்க விரிவாக்கத்திற்காக புதிதாக 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தத் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.
நெய்வேலி பகுதியில் நிலக்கரிச் சுரங்கங்களுக்காகப் பல தலைமுறைகளாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதால், உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி அவர் சட்டமன்றத்தில் எழுப்பிய இந்தக் குரல் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வளமான விவசாய நிலங்களையும் பாதுகாக்கும் நோக்கில், புதிதாக நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனச் சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ முன்வைத்துள்ள கோரிக்கை சட்டப்பேரவையில் புயலைக் கிளப்பியுள்ளது.