அமெரிக்காவில் சர்வதேச அளவில் நடைபெற்ற புகழ்பெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்த மதிப்புமிக்க தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் தட்டிச் சென்றுள்ளதை அடுத்து, தமிழக முதலமைச்சர் விஜய் அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில், அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி, சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” எனப் பாராட்டியுள்ளார்.
சர்வதேச அரங்கில் செஸ் போட்டிகளில் இந்தியாவிற்கும், குறிப்பாகத் தமிழகத்திற்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் பிரக்ஞானந்தாவின் இந்த வரலாற்று வெற்றிக்கு விளையாட்டு பிரியர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.