பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியை அதிகாரப்பூர்வமாகச் சதுப்பு நிலமாக இன்று வரை அறிவிக்காதது தமிழக அரசு மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், இயற்கை நமக்குக் கொடுத்த வரப்பிரசாதமான இந்தச் சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதில் அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
மேடையில் ஆவேசமாக உரையாற்றிய அவர், “இயற்கை கொடுத்த வரத்தைப் பாதுகாக்க முடியவில்லை, அப்புறம் என்ன, நீங்கள் திராவிட கட்சி என்று சொல்லிக் கொண்டுள்ளீர்கள்?” என அரசை நோக்கி நேரிடையாகக் கேள்வி எழுப்பித் தனது கண்டனத்தைப் பதிவிட்டார்.
சென்னையின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பான பள்ளிக்கரணையைப் பாதுகாப்பதில் அரசு அலட்சியம் காட்டுவதாகக் கூறி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்துள்ள இந்த அதிரடிக் கேள்விகளும், கடுமையான விமர்சனங்களும் அரசியல் வட்டாரத்திலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையேயும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.