பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தீவிர அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகி ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ள சூழலில், அவரைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் யாரும் அரசியல் பேசக் கூடாது எனத் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள அவரது தோட்டத்து இல்லத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“அரசியல் துறவறம்” என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருக்கும் அந்த அறிவிப்புப் பலகையில், தினமும் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூகநீதிக்காகப் போராடிய தமிழினப்போராளி மருத்துவர் ஐயா அவர்கள் முழுமையாக அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ள காரணத்தால், தைலாபுரம் தோட்டத்தில் அவரைச் சந்திக்க வரும் ஆதரவாளர்களும் பார்வையாளர்களும் தயவுசெய்து அரசியல் சார்ந்த கருத்துகளையோ விவாதங்களையோ பேச வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் பல தசாப்தங்களாகத் தீர்க்கமான முடிவுகளை எடுத்து, பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்ட மூத்த தலைவரான மருத்துவர் ராமதாஸ், பொது வாழ்விலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி “அரசியல் துறவறம்” பூண்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தைலாபுரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.