தனது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், சோதனையின் முடிவில் ஒரேயொரு கோப்பு மட்டுமே அதிகாரிகளால் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசு மீது சட்டமன்றத்தில் தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருவதாலேயே பழிவாங்கும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கித் தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்குத் தான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடைபெற்ற இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மற்றும் அது தொடர்பாக அவர் முன்வைத்துள்ள அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள், தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.