மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்அனுமதிச் சீட்டு வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வைக் காண்பதற்காகக் கோவிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் பெருமளவில் குவிந்ததை நேரில் கவனித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், ஒலிபெருக்கி மூலம் பக்தர்களிடம் கனிவான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். அவர் பேசுகையில், “கும்பாபிஷேக நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்தவுடன் அனைவரும் கோவிலுக்குள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவீர்கள்; எனவே சற்று பொறுமையோடு காத்திருங்கள்.
காலை 10 மணிக்குத்தான் பொதுத் தரிசனம் தொடங்கவுள்ளது, அதுவரை அனைவரும் அமைதியாக உட்கார்ந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்” என்று அன்போடு கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் இந்த கனிவான மற்றும் அமைதியான பேச்சை ஏற்றுக்கொண்ட மாசி வீதிகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் உடனடியாகத் தரையில் அமைதியாக அமர்ந்து அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்கும் இந்த ஆன்மீகப் பெருவிழாவில், நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமைச்சர் நேரடியாகக் களமிறங்கி பக்தர்களிடம் பேசிய இந்த நிகழ்வு, அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் அமைதியான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.