இசைப் பேரரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட தொடக்க விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் கமல்ஹாசன், தனது வழக்கமான பாணியில் நகைச்சுவையோடும் யதார்த்தத்தோடும் உரையாற்றி மேடையை நெகிழ வைத்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “எனக்கு எந்த பொறாமையும் இல்லை, ஏனெனில் என்னால் இந்தப் படத்தில் நடிக்கவே முடியாது” என்று புன்னகையுடன் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய கமல், “ஒருவேளை நான் எனது தாடியை எடுத்தாலும் அவ்வை சண்முகி கதாபாத்திரத்தில் தான் நடிக்க முடியுமே தவிர, எம்.எஸ் அம்மா ரோலில் என்னால் நடிக்க முடியாது” என்று சிலாகித்துக் கூறினார்.
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிப்பு ஆளுமையான உலகநாயகன் கமல், இசை உலகிலும் இந்திய பண்பாட்டிலும் நீங்காத இடம் பிடித்த எம்.எஸ் சுப்புலட்சுமி அம்மையாரின் ஆளுமைக்குத் தனது பாணியில் தலைவணங்கிப் பாராட்டியது அரங்கத்திலிருந்த அனைவரையும் ரசிக்க வைத்தது.
திரையுலகின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பின் தொடக்க நிகழ்வில், கதாநாயகன் அல்லது முக்கிய கதாபாத்திர எல்லைகளைத் தாண்டி, கதையின் தகுதிக்கும் அதன் நாயகிக்கும் முன்னுரிமை அளித்து கமல் வெளிப்படுத்திய இந்த முதிர்ச்சியான பேச்சு, சினிமா ரசிகர்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.