நடிகர் பிரகாஷ்ராஜ் நமது தர்மத்தைப் பற்றித் தொடர்ந்து கேவலமாகப் பேசி வருகிறார் எனத் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “நானும் சினிமாவில் தான் இருக்கிறேன், ஆனால் காவித்துண்டை போட்டுக் கொண்டு தைரியமாகப் பேசுகிறேன்; ஆனால் பிரகாஷ்ராஜ் தான் எந்தக் கட்சி என்பதை வெளிப்படையாகச் சொல்லவே மாட்டார்” என்று சாடினார்.
மேலும் தொடர்ந்த அவர், “தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கே.பாலச்சந்தர் சார் செய்த மிகப்பெரிய தப்பு, பிரகாஷ்ராஜ் மாதிரி ஒரு ஆளைத் தமிழ் சினிமாவில் நடிகனாக அறிமுகப்படுத்தியது தான்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். “இதே எங்க வனக்காவலர் இருக்கும் போது பிரகாஷ்ராஜ் இப்படி எல்லாம் பேசி இருக்க முடியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சனாதன தர்மம் மற்றும் இந்து மதக் கோட்பாடுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் முன்வைத்து வரும் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மோகன் ஜி பேசியுள்ள இந்தப் பேட்டி, திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வலதுசாரி சித்தாந்த ஆதரவாளரான மோகன் ஜியின் இந்த எல்லைமீறிய சாடல்கள், திரையுலகில் உள்ள இரு வேறு கருத்துடைய பிரிவினரிடையே மீண்டும் ஒரு சித்தாந்த மோதலை உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.