தமிழ்நாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்குச் சரக்குகளைப் பங்கீட்டு அனுப்பும் நடைமுறையில் நிர்வாக ரீதியாகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஒவ்வொரு சில்லறை விற்பனைக் கடையின் உண்மையான தேவை மற்றும் விற்பனைக் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சரக்குகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த, மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களின் சரக்குகளை அனைத்துக் கடைகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கும் ‘ஈக்வல் அப்போர்ஷன்மென்ட்’ (Equal Apportionment) முறை முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அமைப்பில், சில குறிப்பிட்ட பிராண்டுகளுக்குக் குடிப்பிரியர்களிடம் வரவேற்பு இல்லாதபோதிலும், அவை சமபங்கீட்டுக் கொள்கையின் கீழ் கடைகளுக்குக் கட்டாயமாக அனுப்பப்பட்டதால் பெருமளவில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் சூழல் நிலவி வந்தது.
தவெக நிர்வாகத்தின் கீழ் டாஸ்மாக் நிறுவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய மாற்றத்தின் மூலம், கடைகளில் தேவையற்ற சரக்கு தேக்கம் பெருமளவில் குறைவதோடு, அதிக தேவையும் விற்பனையும் கொண்ட முன்னணி பிராண்டுகள் நுகர்வோருக்கு தடையின்றி தாராளமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை நிலவரத்திற்கு ஏற்பச் சரக்கு விநியோகத்தை முறைப்படுத்தும் அரசின் இந்நடவடிக்கை, வணிக ரீதியான தேக்கங்களை உடைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் நிர்வாகத்தை மேலும் சீரமைக்கும் முக்கியக் கட்டமாகப் பார்க்கப்படுகிறது.