“நாங்கள் அரசின் பக்கம் இல்லை”: ஆளும்கட்சிக்குத் திடீர் அதிர்ச்சியளித்த சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பேட்டி!

ஆட்சியைக் கவிழ்க்கும் சிந்தனையோ அல்லது கல் எறியும் சிந்தனையோ தங்களுக்கு இல்லை என்றும், அதேவேளையில் தங்களது ஆதரவு தேவைப்பட்டாலும் தேவைப்படாவிட்டாலும் தாங்கள் அரசின் பக்கம் நிற்கப்போவதில்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் யாருக்கும் நிர்பந்தம் தருபவர்கள் அல்ல. ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு நிச்சயம் இல்லை; ஆனால் எங்கள் ஆதரவு தேவைப்பட்டாலும் சரி, தேவைப்படாவிட்டாலும் சரி, நாங்கள் என்றென்றும் அரசின் பக்கம் இல்லை, மாறாக உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் பக்கம் மட்டுமே உறுதியாக இருப்போம்” எனத் தெளிவுபடுத்தினார்.

ஆளும் தவெக அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநிறுத்த தோழமைக் கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்கும் சூழலில், கூட்டணிக் கட்சியான சிபிஐ மாநிலச் செயலாளரின் இந்த வெளிப்படையான அறிக்கை அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு எடுக்கும் மக்கள் விரோத முடிவுகளையும், கொள்கை விலகல்களையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபோதும் கண்மூடித்தனமாக ஆதரிக்காது என்பதையே வீரபாண்டியனின் இந்தப் பேச்சு வெளிப்படுத்துகிறது.

ஒருபுறம் அரசை வீழ்த்தும் எண்ணம் இல்லை எனக் கூறி நிருவாகச் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பது போல் தோற்றமளித்தாலும், மறுபுறம் அரசின் தவறுகளைக் தட்டிக்கேட்கும் தூணாகவே தங்களை முன்னிறுத்துவது தவெக தலைமைக்குப் புதியதொரு அரசியல் அழுத்தத்தையும் நெருக்கடியையும் கொடுத்துள்ளது.

Leave a Comment