ஆசிய விளையாட்டு தங்கப் பதக்க சாதனை: மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய அணியில் இடம்பெற்ற மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச அரங்கில் அவரது இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக, தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தென் மாவட்டத்தின் எளிய பின்னணியிலிருந்து உருவெடுத்து, சர்வதேச அளவிலான டி20 தொடரில் அபார திறமையை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கக் குழுவில் அங்கம் வகித்துள்ள கமலினியின் வெற்றிப் பயணம், கிராமப்புற மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த இளம் பெண் விளையாட்டு வீரர்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அமைந்திருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த திறமைவாய்ந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பதக்கங்களைக் குவித்து வரும் வேளையில், அவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கி ஊக்கப்படுத்தும் இத்தகைய உயரிய பணமுடிப்புகள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அதேவேளையில், இதுபோன்ற ரொக்கப் பரிசுகள் மற்றும் பாராட்டு அறிவிப்புகளோடு மட்டும் நின்றுவிடாமல், தென் தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுக்களுக்கான உலகத் தரம் வாய்ந்த நவீனப் பயிற்சி மைதானங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விளையாட்டு ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

Leave a Comment