சென்னையின் முதன்மை நீர்நிலைகளில் ஒன்றான கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் திட்டம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்துதல், கழிவுநீர் கலப்பதைத் தடுத்தல் மற்றும் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தி அழகிமைத்தல் உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பது குறித்து மூத்த அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
அத்துடன், இத்திட்டத்திற்கான முதற்கட்ட மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கியுள்ளார்.
தலைநகர் சென்னையின் நீண்டகாலப் பிரச்சனையாக விளங்கும் கூவம் ஆற்றைச் சீரமைக்கப் பல பத்தாண்டுகளாகப் பல்வேறு ஆட்சிகளில் திட்டங்கள் தீட்டப்பட்டு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டபோதிலும், அவை முழுமையான பலனைத் தரவில்லை என்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் வலுவாக உள்ளது. இத்தகைய சூழலில், தவெக அரசு அமைந்த பிறகு கூவம் மறுசீரமைப்புத் திட்டத்தைக் கையில் எடுத்து முதலமைச்சரே நேரடியாக ஆய்வு நடத்தியிருப்பது நிருவாக ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இருப்பினும், வெறும் அறிக்கைகள் தயாரிப்பதோடு நின்றுவிடாமல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுப்பது மற்றும் திட்டப் பணிகளை உரிய காலக்கெடுவிற்குள் முடிப்பது ஆகியவற்றில் அரசு எந்தளவுக்கு வெளிப்படைத்தன்மையுடனும் உறுதியுடனும் செயல்படப் போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் முதன்மை கேள்வியாக உள்ளது.