“மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை”: அரசின் மீதான சோஃபா விமர்சனம் குறித்துத் திருமாவளவன் விளாசல்!

ஆளும் தவெக அரசின் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் சோஃபா பற்றிய விமர்சனம் மக்களால் ஏற்கனவே புறந்தள்ளப்பட்ட ஒன்று என்றும், இத்தகைய தேவையற்ற விமர்சனங்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யாராவது இந்தக் காலத்தில் போய் சோஃபாவை வைத்து காசு கொடுப்பார்களா? சினிமா படத்தில் ஒரு காட்சியில் அது வந்தது. அதை இந்த அரசின் மீது வைக்கப்படும் பெரிய விமர்சனமாக எண்ணிக் கொண்டு, மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அர்த்தமற்ற விமர்சனத்தை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்று சாடினார்.

ஆளும் தவெக அரசு நிருவாக ரீதியாகச் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் கொள்கை சார்ந்த நகர்வுகளை நோக்கி ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்புவதற்குப் பதிலாக, திரைப் படக் காட்சிகளையும் சோஃபா போன்ற தேவையற்ற குறியீடுகளையும் பிடித்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது அவசியமற்றது என்பதை விசிக தலைவரின் இந்தப் பேச்சு உணர்த்துகிறது.

அரசு மீதான உண்மையான குற்றச்சாட்டுகளையும், நிருவாகத்தில் நிலவும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சிகளின் பிரதான கடமையாகும்.

அதை விடுத்து இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பி அரசியலாக்க முயல்வது, அரசின் பொறுப்புக்கூறலைத் திசை திருப்புவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் உண்மையான பிரச்சனை சார்ந்த விவாதங்களை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்பதே நடுநிலையான அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Comment