‘ஜெம்’ வீரமணி விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கடந்த திமுக ஆட்சியில் அரசியல் சார்பு மற்றும் அதிகாரம் இருந்த காரணத்தினால்தான் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இத்தனை நாட்களாகப் பயந்து வெளியில் பேசாமல் அமைதியாக இருந்தார்கள் என அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.
தற்போது தைரியமாக வெளியே வந்து புகார்களைப் பதிவு செய்து வரும் சூழலில், அதிகாரம் இருந்தால் எவரிடமிருந்தும் தப்பித்து விடலாம் என்ற பழைய எண்ணம் இனி செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இன்று அனைவரும் இக்கொடூரத்தைப் பற்றிப் பேசுகிறோம்; அன்றைய முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அய்யாவும் இதைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். முந்தைய ஆட்சியில் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தப்பித்துள்ள நிலையைச் சுட்டிக்காட்டி, குறைந்தபட்சம் இதைக் கண்டித்தாவது உங்கள் வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார்” என்று அமைச்சர் ராஜ்மோகன் நேரடியாகவே சாடியுள்ளார்.
சிறுமிகள் மீதான இத்தகைய கொடுமையான குற்றச்சாட்டுகளில் முன்னாள் முதலமைச்சரின் மௌனத்தைக் கேள்விக்குள்ளாக்கும் அமைச்சரின் இந்தப் பேச்சு, மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது அதிகாரப் பின்புலத்தைப் பயன்படுத்தி விசாரணைகள் முடக்கப்பட்டனவா அல்லது உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டனவா என்ற சட்ட ரீதியான சந்தேகங்களை இக் குற்றச்சாட்டு வலுப்படுத்துகிறது. குற்றவாளிகள் எந்தவொரு அரசியல் சாயமும் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
அதேவேளையில், இத்தகைய உணர்வுப்பூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகளைக் கையாளுவதில் வெறும் அரசியல் பழிவாங்கும் அறிக்கைப் போர்களோடு நின்றுவிடாமல், முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிருவாகத் தவறுகளையும் விசாரணைக் குளறுபடிகளையும் வெளிக்கொணர்ந்து சட்டத்தின் முன் நிறுத்துவதே தற்போதைய தவெக அரசின் உண்மையான கடமையாகும்.