தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த விவாதங்களும் விமர்சனங்களும் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அதிரடி விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், உதயநிதியின் பேச்சு குறித்துக் காட்டமாகப் பேசினார். “ஆபாச நதி பாயுது… சட்டமன்றத்திலும் பாய்ஞ்சது… தஞ்சாவூர்ல பாய்ஞ்சது… இப்போ தாராபுரம், மதுராந்தகத்தில் பாயுது…” என்று அவர் அதிரடியாகக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் பார்த்துகிட்டு இருக்காங்க… இது போன்ற கீழ்த்தரமான பேச்சால் தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது” என்று சாடினார்.
மேலும் பேசிய அவர், “இந்த பேச்சால் திமுக இன்னும் தூரமாகச் செல்கிறார்கள் என்பதை உணர்கிறார்களா என்று தெரியவில்லை” என்று திமுகவின் அரசியல் பாதை குறித்த கவலையையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தினார்.
கூட்டணி மற்றும் பொதுவெளியில் பெரும் கவனத்தைப் பெற்ற மாணிக்கம் தாகூரின் இந்த அதிரடிப் பேச்சு, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த விமர்சனத்திற்குத் திமுக தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.