திராவிட கட்சிகள் என்றால் வண்டி, சாப்பாடு ஏற்பாடு பண்ணனும்!” – விஜய் மேலுள்ள பாசத்தால் வந்த கூட்டம் எனச் சி.விஜயபாஸ்கர் பேட்டி!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் மற்றும் பிரசார நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், நிகழ்விடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திராவிடக் கட்சிகளின் கூட்டங்களுக்கும் தவெக கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டுப் பேசிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், “திராவிடக் கட்சிகள் இப்படி ஒரு மாபெரும் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றால் வண்டி, சாப்பாடு என்று ஏராளமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், இங்கு தாராபுரத்தில் திரண்டிருக்கும் இந்த பிரம்மாண்டக் கூட்டம் அப்படி அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல.

இது தலைவர் விஜய் மீது வைத்துள்ள அளப்பரிய பாசத்தாலும் அன்பினாலும் மட்டுமே தானாகத் திரண்டு வந்திருக்கும் உண்மை தொண்டர்கள் மற்றும் மக்களின் கூட்டம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தாராபுரம் தொகுதியின் தேர்தல் வாய்ப்புகள் குறித்துப் பேசிய அவர், “மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த மாபெரும் ஆதர அலையைப் பார்க்கும் போது, தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை” என்று மிக அழுத்தமாகத் தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.

திராவிடக் கட்சிகளின் கூட்டங்கள் கூட்டும் முறையை விமர்சித்தும், விஜய் மீதான மக்கள் ஆதரவைச் சுட்டிக்காட்டியும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியுள்ள இந்த அதிரடி பேச்சு தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் களம் முழுவதிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment