படிவம் 6-க்கு ஒப்புதல் அளிக்கவில்லை! – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்; தேர்தல் ஆணையத்திற்குப் பின்னடைவு!

இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விளக்கம் அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கைகளின் (SIR) போது புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட ‘படிவம் 6’-க்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

‘படிவம் 6’-உடன் புதிதாக இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகத் தேர்தல் ஆணையம் அண்மையில் கூறியிருந்தது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் இந்த முக்கிய விளக்கத்தை அளித்துத் தேர்தல் ஆணையத்தின் கூற்றை மறுத்துள்ளது.

விசாரணையின் போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், “படிவம் 6-க்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை; இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலுக்கு மாறாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே நேரடியாக இந்த விளக்கத்தை அளித்துள்ளது, தேர்தல் ஆணையத்திற்குப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் படிவம் 6 தொடர்பான இந்த அதிரடித் திருப்பம், தேசிய அளவிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment