சண்முகா டீ ஸ்டால்… இனி முதல்வர் டீக்கடை!– மதுராந்தகத்தில் தவெக தலைவர் விஜய் அளித்த சர்ப்ரைஸ்; நெகிழ்ச்சியில் கடை உரிமையாளர்!

தமிழக அரசியலில் களம் கண்டுள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது எளிய மக்களோடு இயல்பாகக் கலந்துரையாடி வருவது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சாலையோரக் கடை ஒன்றில் அவர் திடீரெனத் தேநீர் அருந்திய சம்பவம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரச்சாரப் பயணத்தின் இடையே மதுராந்தகம் பகுதியில் இயங்கி வரும் ‘சண்முகா டீ ஸ்டால்’ என்ற சிறிய சாலையோரக் கடைக்கு விஜயம் செய்த விஜய், அங்கு நின்றவாறே மிகவும் எளிமையாகத் தேநீர் அருந்தினார். தமிழக முதல்வர் வேட்பாளராகக் களம் காணும் விஜய், தங்களின் சிறிய கடைக்கு வந்து தேநீர் குடித்ததை எதிர்பார்க்காத கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட அக்கடையின் உரிமையாளர், “விஜய் அவர்கள் எங்களுடைய கடையில் தேநீர் அருந்திய தருணத்தை எங்களால் மறக்கவே முடியாது. அவர் டீ குடித்த டம்பளரையும், அதற்காக அவர் கொடுத்துச் சென்ற பணத்தையும் எங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்துத் தினமும் வழிபட்டு வருகிறோம்.

மேலும், எங்கள் கடையின் பெயரை ‘சண்முகா டீ ஸ்டால்’ என்பதிலிருந்து இனி ‘முதல்வர் டீக்கடை’ என மாற்றப் போகிறோம்” என்று பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் பிரச்சாரக் களங்களில் எளிய மக்களோடு இணைந்து இது போன்ற இயல்பான தருணங்களைப் பகிர்வது வழக்கம்தான் என்றாலும், விஜய்யின் இந்தத் திடீர் தேநீர் விஜயமும், அதற்குப் பிறகு கடை உரிமையாளரின் இந்த நெகிழ்ச்சியான எதிர்வினையும் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment