தமிழர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது – ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ‘மாணவர்களின் குரல்’ மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தமிழக உரிமைகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து ஆவேசமாகப் உரையாற்றினார்.

மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, “தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு முற்றிலுமாகச் சிதைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளால் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் குரல் வலுக்கட்டாயமாக ஒடுக்கப்படுகிறது. தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மீதான எந்தவொரு தாக்குதலையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று மிக ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் கல்விக் கொள்கைகள் காரணமாகத் தமிழக மாணவர்கள் சந்தித்து வரும் தொடர் இன்னல்களைத் தேசிய அளவில் சுட்டிக்காட்டி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் மொழியையும் அதன் தனித்துவமான பண்பாட்டையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி எப்போதுமே முன்னிற்கும் என்று உறுதி கூறினார்.

விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்தி ஆற்றிய இந்த அதிரடி உரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தி திணிப்பு மற்றும் நீட் விவகாரம் தேசிய அரசியல் அரங்கில் மீண்டும் ஒருமுறை தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளதை இந்த மாநாடு வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Comment