தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “இது யார் வீட்டுக் காசு சார்? அதிமுகவில் இருந்து மேலும் 15 பேரை வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம் என்று எந்தவித வெட்கமும் இல்லாமல் பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும், “சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்குப் பணம் போதாமல்தான் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதில் இவ்வளவு பெரிய ஊழல் நடக்கிறதோ என மக்கள் மனதில் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன” என்று கடுமையாகக் சாடியுள்ளார்.
அரசியல் குதிரை பேரங்களுக்காகவும், சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் தான் மக்கள் வரிப்பணம் இதுபோன்ற திட்டங்களில் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக தலைவரின் இந்த அதிரடி பேச்சு மற்றும் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளையும், கடுமையான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.