இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது அடிப்படையில் எ cதும் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 மற்றும் 19(1)(a)-ன் கீழ், இணையத்தை அணுகும் உரிமையானது வயது வரம்பின்றி ஒவ்வொருவருக்கும் இருப்பதாக நீதிபதிகள் பர்திவாலா மற்றும் சந்திரன் அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைத் தவிர்ப்பதற்காக, குழந்தைகளுக்கு இணையப் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாகப் பல்வேறு மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.
குறிப்பாக, பெற்றோரின் முறையான கண்காணிப்பு, சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பிரத்யேக வழிகாட்டுதல்களை உருவாக்குதல், மற்றும் இணையத்தில் பரவும் ஆபத்தான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை (Hazardous Contents) உடனடியாக நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளின் கல்வி மற்றும் தகவல் அறிதலுக்கு இணையம் அவசியமான ஒன்றாக மாறிவரும் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து மற்றும் யோசனைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இணையப் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.