விலைவாசி உயர்வு… வெடித்த வன்முறை! பிரான்ஸில் 5.5 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராட்டம்: 1,200 பேர் கைது!

பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் நாளுக்கு நாள் எகிறி வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு தழுவிய அளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 5.5 லட்சம் பேர் பங்கெடுத்து அரசுக்கு எதிராகத் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

தலைநகர் பாரீஸில் நடைபெற்ற போராட்டம் எதிர்பாராதவிதமாகக் வன்முறையாக மாறியது. அங்குப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல் துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிப் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்.

எனினும், மோதல் தீவிரமடைந்ததில் நகரின் பல இடங்களில் தீவைப்புச் சம்பவங்கள் அரங்கேறின. அத்துடன் வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அடித்துச் சூறையாடப்பட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. வன்முறையைக் கட்டுப்படுத்தவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தீவிர நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர், இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்களின் கடுமையான இந்தப் போராட்டத்தால் பிரான்ஸ் நாட்டின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு, சர்வதேச அளவில் இந்நிலை பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment