பயணியை வேறு நிறுத்தத்தில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநர் தற்காலிகப் பணி நீக்கம்!

பயணியை அவர் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமல், வேறு நிறுத்தத்தில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநரைத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்காலிகப் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

முத்துப்பேட்டையிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், பெண் பயணி ஒருவர் சேத்தியாத்தோப்பில் இறங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், நடத்துநர் கலைமோகன் அங்கு பேருந்து நிற்காது எனக் கூறி, பயணியை வடலூரில் இறக்குவதற்காகப் பயணச்சீட்டு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனங்களை எழுப்பியது.

இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்ட கும்பகோணம் கோட்டத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், பயணிகளிடம் அலட்சியமாக நடந்துகொண்ட நடத்துநர் கலைமோகனை உடனடியாகத் தற்காலிகப் பணி நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த உடனடி நடவடிக்கைக்குப் பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Comment