₹40 லட்சம் ஜீவனாம்சம் சும்மா கேட்கல!” ஜெயம் ரவி விவகாரத்தில் அத்தை சுஜாதா பரபரப்பு விளக்கம்!

நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் ஆர்த்தி விவாகரத்து விவகாரம் மற்றும் ஜீவனாம்ச வழக்கு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, பல்வேறு வதந்திகளும் விமர்சனங்களும் பரவி வந்தன. இந்நிலையில், ஆர்த்தியின் தாயாரும், பிரபல தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார், இந்த விவகாரம் குறித்து முதன்முறையாகத் தனது தரப்பு உண்மைகளையும், நிதி நெருக்கடிகளையும் விவரித்து விரிவான விளக்கமளித்துள்ளார்.

“நாங்கள் காரணமின்றி ரவி மோகனிடம் இருந்து மாதம் ₹40 லட்சம் ஜீவனாம்சமாகக் கேட்கவில்லை. விட்டுச் செல்லப்பட்ட மிகப்பெரிய கடன்கள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாகக் குழந்தைகளின் பள்ளி நிதியுதவி, உணவு, டியூஷன் மற்றும் பிற செலவுகளுக்கு எந்தவித நிதி ஆதரவும் வழங்கப்படவில்லை. நிலைமை மோசமாகி ICICI வங்கியிடம் இருந்து வீட்டிற்கு நோட்டீஸ் கூட வந்தது; எந்தவொரு பெற்றோர் அல்லது குடும்பமும் சந்தித்துக்கூடப் பார்க்கக்கூடாத சூழல் இது” என்று அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் கல்விச் செலவு குறித்துப் பேசிய அவர், “இரண்டு பெற்றோரும் இணைந்து எடுத்த முடிவின்படிதான் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் இருந்தே அமெரிக்கன் பள்ளியில் (American School) படித்து வருகின்றனர். அவர்களின் ஆண்டுப் பள்ளிச் செலவு மட்டும் சுமார் ₹86 லட்சம் ஆகிறது. தற்போதைய நீதிமன்ற உத்தரவில் அவர்களின் கல்விச் செலவுகளைச் செலுத்த வேண்டும் என்று தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் சந்திப்பு மற்றும் ₹100 கோடி முதலீடு: உடைத்துப் பேசிய தயாரிப்பாளர்!

ரவி மோகன் தனது மகன்களைச் சந்திப்பது குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “நான் என்றுமே அவர் குழந்தைகளைச் சந்திப்பதைத் தடுத்ததில்லை. உண்மையில் நாங்கள்தான் வழக்கறிஞர் மூலம் சந்திப்பு உரிமைகளுக்காக (Visitation rights) விண்ணப்பித்தோம். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அவர் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளைச் சந்திக்கலாம். இடைத்தரகர்களாக வேறு நபர்கள் இல்லாதபட்சத்தில், தாத்தா-பாட்டி உடனோ அல்லது பொது இடங்களிலோ குழந்தைகளைச் சந்திக்க அவர்கள் எப்போதும் தயராகவே இருந்தனர்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

தங்களின் திருமண வாழ்க்கை மற்றும் சுயமரியாதை குறித்துப் பேசிய அவர், “நாங்கள் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை; 10 பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தி, 10,000 பேருக்கு விருந்தளித்துக் கொண்டாடப்பட்ட திருமணம் இது. ஒரு தயாரிப்பாளராக வெளி நிதியுதவி மூலம் எனது சொந்த முயற்சியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன். ரவி மோகனின் திரைப்படங்களுக்காக நான் சுமார் ₹100 கோடி முதலீடு செய்துள்ளேன். ஆர்த்தி தன் உரிமைகளுக்காக மட்டுமே போராடுகிறார், தன் குடும்பம் மீண்டும் ஒன்றாக வேண்டும் என்றே விரும்புகிறார்” என்றார்.

மேலும், தனது பேரனின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், “ஆரவ் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்ததில் இருந்தே கதாநாயகன் ஆக வேண்டும் என்று விரும்பினான். லண்டனில் ஃபிலிம் மேக்கிங் படிப்பதற்காக அவனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கத் தந்தையின் கையொப்பம் தேவைப்பட்டது. ஆனால் பலமுறை கேட்டும் அந்த கையொப்பம் கிடைக்காததால் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியதாயிற்று. விஜய் சாரின் மகன் ஜேசன் சஞ்சய் கூட தன் தந்தையுடன் பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருக்கிறார்; குடும்ப விவகாரங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து பேசுவதால் யாருக்கு என்ன லாபம்?” என்று சுஜாதா விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment