தமிழ் திரை உலகமும் மலையாளத் திரை உலகமும் (Mollywood) கலை ரீதியாக நீண்ட காலமாகவே நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளன. மலையாளத் திரைப்பட நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் முதல் பஹத் பாசில், துல்கர் சல்மான், விநாயக் வரை பலருக்குத் தமிழ் சினிமா என்றும் சிவப்புக் கம்பளம் விரித்து நல்ல கனமான கதாபாத்திரங்களை வழங்கி முதன்மைப்படுத்தி கொண்டாடி வருகிறது.
இருப்பினும், சமீபகாலமாக வெளியாகும் பல மலையாளத் திரைப்படங்களில், குறிப்பாக த்ரிலர் (Thriller) வகை திரைப்படங்களில், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் சித்தரிக்கும் விதம் குறித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் ஆதங்கமும் உருவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்த காரசாரமான விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
மலையாளத்தில் உருவாகும் பெரும்பாலான குற்றவியல் மற்றும் த்ரிலர் திரைப்படங்களில், ஒரு குற்றம் நடக்கும் இடமாகவோ, குற்றவாளி தப்பி ஓடும் இடமாகவோ அல்லது குற்றத்திற்கு மூலக்காரணமாக இருக்கும் நபராகவோ தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரையோ அல்லது தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியையோ சித்தரிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர் என ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
‘உயிர்’ படம் முதல் தொடரும் சர்ச்சை: மூஞ்சிக்கு நேராகக் கேள்வி கேட்க ரசிகர்கள் வலியுறுத்தல்!
சமீபத்தில் வெளியான ‘Uyir’ திரைப்படத்திலும் கூட, படத்தின் முதன்மை குற்றவாளி கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நடிக்க வைத்து, எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது ஏதோ ஒரு குறிப்பிட்ட படத்தில் மட்டும் நடக்கும் விஷயம் அல்ல என்றும், பல வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் இது போன்ற சம்பவங்கள் திட்டமிட்டுப் பிரதிபலிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒருபுறம் கேரளாவில் இருந்து வரும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தமிழ் திரையுலகம் மிகுந்த மரியாதையும், நாயகன்-நாயகி அந்தஸ்தும் கொடுத்துக் கொண்டாடி வரும் நிலையில், மலையாளத் திரையுலகம் தமிழர்களைத் தொடர்ச்சியாக ‘வில்லத்தனமான’ அல்லது தாழ்வான பிம்பத்துடன் சித்தரிப்பது ஏன் என்ற கேள்வி வலுத்து வருகிறது.
“மலையாள இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தமிழ்நாட்டிற்குப் பட விளம்பரங்களுக்காகவும், பேட்டிகளுக்காகவும் வரும்போது, நமது தமிழ் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்தத் திரைப்படங்களின் பட்டியலைச் சுட்டிக்காட்டி, அவர்களின் இந்த முரண்பாடான சித்தரிப்பு குறித்து மூஞ்சிக்கு நேராகக் கேள்வி கேட்க வேண்டும்” எனத் தமிழ் சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.