தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026–27: மண்ணைக் காக்கவும், நவீனத் தொழில்நுட்பத்தை விதைக்கவும் தொலைநோக்குத் திட்டங்கள்!

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–27 ஆம் நிதியாண்டிற்கான தனித்துவமான வேளாண் வரவு–செலவுத் திட்டம், மாநிலத்தின் விவசாயத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல முற்போக்கான அறிவிப்புகளை உள்ளடக்கியுள்ளது.

மண் வளத்தைப் பாதுகாத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ‘தமிழ்நாடு மண்வளம் பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டு, அதற்கென ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், நோய் மேலாண்மை மற்றும் சந்தை நிலவரங்களை உடனுக்குடன் உழவர்கள் அறியவும் ‘உழவர் செய்யறிவுத் திட்டம்’ ரூ.2 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2026–27 ஆம் ஆண்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியை 131 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, கூட்டுறவுத் துறை மூலம் ரூ.17,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கப் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடியும், விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டத்திற்காக ரூ.7,432 கோடியும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

இதோடு, மகளிர் உழவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கும் ‘வான்மகள் திட்டம்’, காட்டுப்பன்றி சேதத் தடுப்பு நிதி, உயிர்ம விவசாய ஊக்குவிப்பு மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின உழவர்களுக்கான 100 சதவீத மானியச் சலுகைகள் போன்றவை உழவர் சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்துவதில் பெரும் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, இத்தகைய அறிவிப்புகள் பாரம்பரிய வேளாண்மையை அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் பிணைத்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு நம்பிக்கையூட்டும் பயணமாக அமைந்திருக்கிறது.

Leave a Comment