திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், கோவையில் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’ கட்டடப் பணிகள் தற்போதைய த.வெ.க ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பெரும்பாலான பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போதைய ஆட்சியாளர்களின் மந்தமான போக்கால் இத்திட்டம் முடங்கிக் கிடப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம் கட்டடம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் பெருமளவில் பயன்படும் வகையில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.
அனைத்துப் பணிகளும் நிறைவடையும் தறுவாயில் இருந்த இத்திட்டம், மக்கள் பயன்பாட்டிற்கு வருவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டு வருவது அப்பகுதி இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக இது போன்ற அறிவார்ந்த மையங்களைத் திறப்பதில் தாமதம் காட்டக்கூடாது என்றும், மக்களின் வரிப் பணத்தில் உருவான இக்கட்டிடத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.