“எனது அரசியல் பயணம் இனி வேறு பாதையில் செல்லலாம்…”: அதிமுகவில் இருந்து விலகுவதாக அப்ஸரா ரெட்டி அதிரடி அறிவிப்பு!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (அதிமுக) தாம் விலகுவதாகக் கட்சியின் முக்கியப் நிர்வாகியும் செய்தித் தொடர்பாளருமான அப்ஸரா ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாகக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள விலகல் கடிதத்தில், தனது மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அதிமுகவில் பணியாற்றிய காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள், அங்கீகாரம் மற்றும் மரியாதைக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தற்போதைய சூழலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது எதிர்கால அரசியல் பாதை குறித்துப் பேசிய அவர், “எனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் செல்லலாம். ஆனால் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற எனது நோக்கம் என்றும் மாறாது” என்று மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

அரசியல் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு முக்கியத் தளம் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்கள் நலனை மையமாகக் கொண்டு தனது பொதுவாழ்க்கைப் பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்ஸரா ரெட்டியின் இந்த அதிரடி விலகல் முடிவு மற்றும் அவரது அறிக்கை, தமிழக அரசியல் களத்திலும் குறிப்பாக அதிமுக நிர்வாகிகளிடையேயும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Leave a Comment