ஏன் அனுமதி இல்லை?: முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காட்டமான கேள்வி!

இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் குறித்துத் தமிழ்நாட்டின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் தனது கடுமையான கண்டனத்தையும் கேள்வியையும் பதிவு செய்துள்ளார்.

“இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தானதாகக் கூறப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சுமார் 70 ஒப்பந்தங்கள் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியிலேயே வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டவை” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் நிகழ்வுக்கு அனுமதிக்கப்பட்டால், இந்தத் உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்றும், திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களையே மீண்டும் புதிய ஒப்பந்தங்களாகக் காட்டி விளம்பரம் செய்கிறார்கள் என்பதை ஊடகங்கள் உடனடியாகக் கண்டுபிடித்துவிடும் என்பதால் தான் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா? என்றும் அவர் காட்டமாக வினவியுள்ளார்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொண்டு பழைய ஒப்பந்தங்களையே மறுசுழற்சி செய்து செய்தி வெளியிடும் போக்கு நிர்வாக வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குவதாக அவர் விமர்சித்துள்ளார். தொழில்துறை வளர்ச்சியில் உண்மை நிலையை மறைக்க முயல்வது முறையான அணுகுமுறை அல்ல என்றும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் கேள்விகளுக்குத் தற்போதைய அரசு முறையான பதிலை அளிக்க வேண்டும் என்றும் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார். அவரின் இந்த அதிரடிக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment