கரூர் நெரிசல் வழக்கு: அரசுப் பணி ஆணைகள் ரத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்!

கரூர் பகுதியில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் தற்போதைய துயர நிலையையும் கருத்தில் கொண்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட இந்தச் சிறப்புப் பணி ஆணைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பணி நியமனங்களை ரத்து செய்திருந்தது. இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை அமர்வு, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “இது ஒரு மிகவும் துயரமான சம்பவம்; மனிதநேய அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படும்போது, இதில் யாரும் தேவையற்ற அரசியல் செய்யக்கூடாது” என்று காட்டமாகக் குறிப்பிட்டனர்.

மேலும், குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டும் நபரை இழந்தவர்களுக்கு அரசு பணி வாய்ப்பு வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்மனுதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவு, பணி ஆணை பெற்று உயர்நீதிமன்ற தீர்ப்பால் கவலையில் இருந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் மாபெரும் நிம்மதியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. அதேவேளையில், துயரச் சம்பவங்களில் நிவாரணம் வழங்கும் அரசின் அதிகார வரம்பு மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்த இந்த வழக்கு, மாநிலத்தின் சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment