விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான வன்னி அரசு, தனக்கு அமைச்சர் பதவியில் விருப்பமில்லை என்றும், கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டே இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பூக்கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளில் பேசிய அவர், தங்களின் அரசியல் பயணம் பதவிக்கானது அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் பேசுகையில், “நானோ அல்லது ஆளூர் ஷா நவாஸ் போன்றவர்களோ எம்.எல்.ஏ (MLA) பதவியையோ அல்லது பிற உயர்பொறுப்புகளையோ எதிர்பார்த்துக் கட்சியில் பணியாற்றவில்லை. அமைச்சுப் பதவியைப் பெறுவதில் கூட எனக்கு எவ்வித தனிப்பட்ட விருப்பமும் இருக்கவில்லை; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்குக் முழுமையாகக் கட்டுப்பட்டே இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொண்டையும் கொள்கைப் பாதையுமே தங்களுக்கு முதன்மையானது எனக் குறிப்பிட்ட அவர், பதவிகள் மற்றும் அதிகாரங்களைக் காட்டிலும் எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதே தங்களின் நோக்கம் என்பதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசிக நிர்வாகிகளின் இந்த நிலைப்பாடு மற்றும் அமைச்சர் வன்னி அரசின் இந்த அதிரடியான கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.