“டில்லியில் பேசியது என்ன?”: அமித் ஷா அழைப்பை நிராகரித்ததாக அண்ணாமலை சுவாரஸ்யத் தகவல்கள்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தம்மை டெல்லிக்கு அழைத்து தேசிய அளவில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதனை தாம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது அமித் ஷா தன்னிடம் பேசிய சுவாரஸ்யமான உரையாடல்களைப் பகிர்ந்துகொண்ட அவர், தேசிய அரசியலில் தொடர்ந்து செயலாற்றுவதற்காகக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டும் என பாஜக தலைமை அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், டெல்லியில் தங்கிப் பணியாற்றுவது தனக்கு ஒத்துவராது என்பதைத் தலைமைக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறிய அண்ணாமலை, “தமிழகத்தில் இருந்து கொண்டே எனது அரசியல் மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்கிறேன்” என அவரிடம் உறுதியாகக் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.

மாநில அரசியலிலும் தமிழக மக்களின் களப் பணிகளிலுமே தமக்கு அதிக விருப்பம் உள்ளது என்றும், அதனாலேயே தேசிய அளவிலான முக்கியப் பொறுப்புகளைத் தவிர்த்துவிட்டுத் தமிழகத்தில் தொடர்ந்து பணியாற்ற முடிவெடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு மற்றும் டெல்லி பதவி குறித்தான அண்ணாமலையின் இந்த அதிரடி வெளிப்படைப் பேச்சு, தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேசிய அளவில் வாய்ப்புகள் கிடைத்தும் அதைத் தவிர்த்து மாநில அரசியலில் கவனம் செலுத்தும் அவரது இந்த முடிவு, ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.

Leave a Comment