“மன்னராட்சியின் மகன்கள் அல்ல…”: எதிர்க்கட்சித் தலைவருக்குச் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி பதிலடி!

“எங்கள் கட்சியில் யார் அமைச்சர், யார் எம்.எல்.ஏ என்றே தெரியவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்த நிலையில், அதற்குச் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் காரசாரமாகப் பதிலளித்துள்ளார். பேரவையில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சியினரின் இத்தகைய விமர்சனங்கள் தங்களது கட்சியின் அடிமட்ட உழைப்பையும், சாதாரண பின்புலத்தையும் உணராமல் பேசப்படும் பேச்சுகள் எனத் சாடினார்.

அவையில் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “இங்கு மக்கள் பணியாற்றும் சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது அமைச்சர்களோ எந்தவொரு பண்ணையாரின் பிள்ளைகளும் இல்லை; மன்னராட்சியின் மகன்களும் இல்லை.

நாங்கள் எவ்வித சாதி, மதப் பலமும் இல்லாத மிகவும் சாதாரணக் குடும்ப பின்னணியில் இருந்து உழைப்பால் உயர்ந்து வந்தவர்கள்” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார். வம்சாவளி அரசியலையோ அல்லது பணபலத்தையோ நம்பித் தாங்கள் வரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பேரவையிலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த இந்த அதிரடி பதிலடி, சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. மக்கள் பிரதிநிதிகளின் பின்னணி மற்றும் தகுதி குறித்து இரு தரப்பிற்கும் இடையே நிகழ்ந்த இந்த சுடச்சுட விவாதம், தற்போது தமிழக அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களிலும் காரசாரமானப் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Comment