“மீண்டும் திட்ட அறிக்கை”: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் அடுத்தகட்ட அதிரடி நகர்வு!

காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான தனது தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, திருத்தப்பட்ட புதிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர் ஆணையத்திடம் (CWC) கர்நாடக அரசு முறைப்படி சமர்ப்பித்துள்ளது. கர்நாடக துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், அம்மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இப்புதிய திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவுகளுடன் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகதாது அணை திட்டத்தின் மூலம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், மின் உற்பத்தி செய்யவும் முடியும் எனப் பல ஆண்டுகளாகக் கர்நாடக அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.

இருப்பினும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரியின் இயல்பான நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் கூறித் தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டிலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில் கர்நாடகா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கர்நாடக அரசு மீண்டும் திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது, தமிழக அரசியல் வட்டாரங்களிலும் விவசாயிகள் மத்தியிலும் மீண்டும் கொந்தளிப்பையும் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரு மாநிலங்களுக்குிடையே நீண்டகாலமாக நிலவி வரும் காவிரி நதிநீர்ச் சிக்கலில், கர்நாடகாவின் இந்த புதிய நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Leave a Comment