சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி ஆய்வுகளுக்காக அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படும் எனப் பேரவையில் அறிவிக்கப்பட்டதற்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அரசின் இந்த ஆடம்பரமான முடிவைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் இத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எம்.எல்.ஏ.-க்களுக்குப் புதிய சொகுசுக் கார்களை அரசு சார்பில் வழங்குவதற்குப் பதிலாக, கடனில் தவிக்கும் ஏழை விவசாயிகளின் விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்திருக்கலாம்” எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.
மேலும், “ஏற்கனவே 90% எம்.எல்.ஏ.-க்களிடம் சொந்தமாகக் கார்கள் இருக்கின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது, மக்கள் பணத்தில் அவர்களுக்கு மீண்டும் புதிய கார்களை வாங்கிக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளான விவசாயக் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்துதல் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்கள் பிரதிநிதிகளுக்குக் சலுகைகளை அள்ளித் தருவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த நேரடி விமர்சனமும் கண்டனமும் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.