தனது சட்டமன்றப் பணிகள் மற்றும் பயணங்கள் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்குப் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் தெளிவான விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சட்டமன்றத்தில் தான் பேசிய கருத்து தவறாகத் திரிக்கப்பட்டு உலா வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், உண்மைய நிலவரத்தை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது விளக்கம் குறித்துப் பேசிய எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன், “தனது தொகுதிக்குச் செல்லவும் சென்னை வரவும் சுமார் 450 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டி இருப்பதால், தான் பெரும்பாலும் ரயிலிலேயே பயணிக்கிறேன் என்றும், அதைத் தான் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிப் பேசினேன் என்றும்” தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு மாறான செய்தி எனக் குறிப்பிட்ட அவர், தான் சொகுசு காரைப் பயன்படுத்தவில்லை என்றும் உறுதியாக மறுத்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் பயண முறைகள் தொடர்பாகப் பொதுவெளியில் காரசாரமான விவாதங்கள் எழுந்து வரும் சூழலில், பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன் அளித்துள்ள இந்த நேரடி விளக்கம் தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எதார்த்தமான சூழலை விளக்கி அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தற்போது அரசியல் தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.