“100 நாள் ஆட்சியில் 6 காவல் மரணம்!”: தவெக அரசின் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தவெக அரசு அமைந்த முதல் 100 நாட்களில் 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பது தவெக கொடுங்கோன்மை அரசின் சாதனை என அவர் சாடியுள்ளதுடன், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக அரசுக்கு எதிராகச் சரமாரியான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, மதுரையில் போலிஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதால் ஐயா பரமசிவம் என்பவர் உயிரிழந்த சம்பவம் தமக்கு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாகச் சீமான் தெரிவித்துள்ளார்.

விசாரணை என்ற பெயரில் காவல்துறை நடத்தும் தாக்குதல்களும் மனித உரிமை மீறல்களும் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட ஐயா பரமசிவத்தின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இனிவரும் நாட்களில் இதுபோன்ற காவல் நிலைய மரணங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் தமிழக அரசு மிகக் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள இந்தக் கண்டன அறிக்கை, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சூழல் குறித்தும் காவல்துறையின் அணுகுமுறை குறித்தும் பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment