இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் ‘சாதாரண சேமிப்புக் கணக்கு’ என்று அழைக்கப்படும் எளிய சேமிப்புக் கணக்குகளில் (Basic Savings Bank Deposit – BSBD) பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டண முறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
புதிய நடைமுறையின்படி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், இந்த BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 4 முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ள முடியும். 4 முறைக்கு மேல் பணத்தை எடுக்கும்பட்சத்தில், ஐந்தாவது பரிவர்த்தனையில் இருந்து ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ. 15 உடன் ஜிஎஸ்டி (GST) கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 இலவச பணப் பரிவர்த்தனைகள் வங்கி கிளைகள், எஸ்பிஐ மற்றும் பிற வங்கி ஏடிஎம்கள் (ATM) மற்றும் ஆதார் அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை (AEPS) ஆகிய அனைத்திற்கும் பொருந்தும்.
இருப்பினும், நெட் பேங்கிங், யுபிஐ (UPI), ஆப் மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி வழக்கம்போல முற்றிலும் இலவசமாகவே தொடரும் என வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏழை எளிய மக்களுக்காக குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) பராமரிக்கத் தேவையில்லை என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட இக்கணக்குகளில், அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த சேவைக் கட்டண மாற்றம் குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.