சென்னையில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் மாநாட்டின் போது, காவிரி ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணை குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மிக முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசித்த வேளையில், மேகதாது அணைத் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து அவர் விரிவாகக் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் மற்றும் மாநாட்டு மேடையில் இதுகுறித்து பேசிய டி.கே. சிவக்குமார், “மேகதாது அணையில் இருந்து பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கான 5 டி.எம்.சி. தண்ணீரைத் தவிர, மீதமுள்ள பெருமளவிலான தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்குத்தான் வழங்கப்படும். இந்த அணை எங்களுக்காக கட்டப்படவில்லை, உங்களுக்காகத்தான் கட்டப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை அமைப்பதன் மூலம் மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீர் சேமிக்கப்பட்டு, வறட்சி காலங்களில் தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைத் தடையின்றி வழங்க முடியும் என அவர் வாதிட்டார்.
இருப்பினும், காவிரி நதிநீர் உரிமையில் தமிழகத்திற்குப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், கர்நாடக துணை முதல்வரின் இந்த வாக்குறுதி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழகத்தின் விவசாயத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் இரு மாநில அரசியல் வட்டாரங்களிலும் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன.