“கம்யூனிஸ்டுகள் தயவால் தான் ஆட்சி நடக்கிறது!”: ஆதரவு அளித்த கட்சி மீது தலைமைச் செயலாளர் தவறாக நடந்து கொள்வதா? முதலமைச்சர் விஜய்க்கு பெ.சண்முகம் கேள்வி!

தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆட்சி அமைவதற்கு முக்கியத் தூணாக விளங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது அரசு நிர்வாகத்தின் சில செயல்பாடுகளுக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களைச் சேகரிக்க அதிகாரிகள் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துச் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தவெக அரசு அமைவதற்குக் கம்யூனிஸ்டுகள் கொடுத்த ஆதரவே முதன்மையான காரணம் என்பதைச் சுட்டிக்காட்டினார். “நாங்கள் அளித்துள்ள ஆதரவு காரணமாகத்தான் இந்தத் தவெக அரசு தொடர்ந்து நீடித்து வருகிறது” என்று குறிப்பிட்ட அவர், ஆட்சி அமைக்க ஆதரவளித்தக் கட்சி மீதே தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “அரசுத் துறை அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப்போகிறீர்களா அல்லது இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைத் தொடரப்போகிறீர்களா?” என முதலமைச்சர் விஜய்க்கு அவர் நேரடிச் சவாலை விடுத்துள்ளார். அரசு நிர்வாகத்தின் இத்தகைய உள்நோக்கம் கொண்ட செயல்பாடுகளைக் இடதுசாரிகள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment