தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் மற்றும் கூட்டணி கணக்குகள் குறித்த காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தவெக சார்பில் நடைபெற்ற முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ், திமுகவின் கூட்டணி அரசியலையும் தவெகவின் பலத்தையும் ஒப்பிட்டு அதிரடியான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
அவர் பேசுகையில், “தமிழக வெற்றி கழகம் எந்தவொரு பெரிய கூட்டணியும் இன்றித் தனிப்பெரும் கட்சியாகக் களம் கண்டு 108 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இது கட்சியின் கொள்கைகளுக்கும், தலைவரின் ஆளுமைக்கும் மக்கள் அளித்த அங்கீகாரமாகும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், திமுகவின் வெற்றி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“அதேவேளையில், 23 கட்சிகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக, அந்த கூட்டணி மட்டும் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட ஜெயித்துப் பேரவைக்கு வந்திருக்க முடியாது” என்று சாடினார்.
கூட்டணியை மட்டுமே நம்பி களம் காணும் திமுக போன்ற கட்சிகளுக்கு மத்தியில், தனித்து நின்று பெற்ற இந்த 108 தொகுதிகளின் வெற்றி தவெகவின் உண்மையான மக்கள் செல்வாக்கைக் காட்டுகிறது என அவர் பேசினார். அமைச்சர் ஆதவின் இந்த நேரடித் தாக்குதல் பேச்சு, திமுக கூட்டணி வட்டாரத்திலும் தமிழக அரசியல் தளத்திலும் புதிய காரசார விவாதங்களைக் கிளப்பியுள்ளது.