திமுகவின் உட்கட்சி அமைப்புகள், நிர்வாகப் பணிகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தங்களது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சில தவறுகள் குறித்து வெளிப்படையாகவும் உருக்கமாகவும் பேசி அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கூட்டத்தில் உரையாற்றிய அவர், “ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்குத் தனக்குக் கீழே இருக்கும் இருட்டு தெரியாது; அப்படித்தான் நமக்கு நம்மகிட்ட இருந்த தவறுகளைக் கண்டறிய தவறிவிட்டோம்” என்று மிகத் துணிச்சலாகத் தங்களது பலவீனங்களை ஒப்புக்கொண்டார்.
அதிகாரத்தில் இருந்த காலத்தில் மக்கள் மத்தியில் எழுந்த சில அதிருப்திகளையும், நிர்வாக ரீதியாக நடந்த தவறுகளையும் சுட்டிக்காட்டிய அவர், தொண்டர்களும் நிர்வாகிகளும் கடந்தகாலப் பிழைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தங்களைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் மேடைகளில் வழக்கமாக எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வரும் தலைவர்களுக்கு மத்தியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களது தவறுகளைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு பேசியுள்ள இந்த சுயபரிசோதனை பேச்சு, திமுக தொண்டர்கள் மத்தியிலும் தமிழக அரசியலிலும் புதிய விவாதத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.