சட்டமன்றத்தில் நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் இன்றே பதில் சொல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், “திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்; யாரும் ஓடாமல் இருங்கள்” என்று சொல்லிவிட்டு அவரே ஓடிப்போய்விட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “அவர் சொன்ன வார்த்தையைத் தான் நான் திருப்பிச் சொல்கிறேன்; முதலமைச்சர் தைரியமாகப் பதில் சொல்லட்டும், அதற்காகத் தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும் தவெக ஆட்சியில் காவல்துறை மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “முடிந்தால் இதற்குத் தகுந்த பதில்களை முதலமைச்சர் வருகிற திங்கட்கிழமை கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்” எனக் காரசாரமாகக் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் யாரும் ஓடக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “ஓடாதே என்றவரே ஓடிவிட்டார்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ள இந்தக் கருத்துக்கள், சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேரவைக் கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.