“கோவில் கணக்குகள் அம்பலம்!”: 10 முக்கிய விவரங்களை பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்!

கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வரவு செலவு கணக்குகள் உட்பட பத்து வகையான மிக முக்கியமான விவரங்களைப் பக்தர்கள் எளிதில் பார்க்கும் வகையில் அந்தந்தக் கோவில் வளாகங்களில் வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவில்களின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், நகை மற்றும் அசையும், அசையாச் சொத்துக்களின் முழு விவரங்கள், தினசரி மற்றும் வருடாந்திர வரவு செலவு கணக்குகள், குத்தகை பாக்கி விவரங்கள், கோவில் ஊழியர்களின் பணியிடங்கள் மற்றும் கட்டண விவரங்கள் உள்ளிட்ட 10 வகையான தரவுகளைத் தகவல் பலகைகள் அல்லது டிஜிட்டல் திரைகள் மூலம் பக்தர்கள் பார்வைக்குப் வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வெளிப்படையான நிர்வாக முறையைக் கொண்டு வரவும், பக்தர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் பிறப்பிக்கப்பட்டுள்ள மாநில தகவல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு, ஆன்மீக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment