“தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊருக்கு ஊர் சென்று விசில் ஊதிப் பேசிய விஜய், தற்போது ஆட்சியில் நடக்கும் குற்றங்களுக்கு அரசைக் தற்காத்துக் கொண்டு பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக ஆட்சியின் அணுகுமுறையைக் காரசாரமாகச் சாடினார். “தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டில் நடந்த அனைத்துக் குற்றச் சம்பவங்களுக்கும் அன்றைய அரசுதான் முழுப் பொறுப்பு என்று ஊர் ஊராகச் சென்று விசில் ஊதிப் பிரச்சாரம் செய்தவர் விஜய்.
ஆனால், இன்றைக்குத் தாமே முதலமைச்சரான பிறகு மாநிலத்தில் நடக்கின்ற பல்வேறு குற்றங்களுக்கு அரசு பொறுப்பல்ல, மக்கள்தான் பொறுப்பு என்பது போலப் பேசி, தங்களது அரசின் முதன்மையான பொறுப்பை முற்றிலும் தட்டிக் கழிக்க முயல்கிறார்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதிலுரை, சர்க்காரியா கமிஷன் விவகாரம், திமுகவினரின் வெளிநடப்பு மற்றும் சபாநாயகரின் அதிரடி எச்சரிக்கைகள் எனத் தொடர்ந்து அரசியல் களம் சூடேறியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் பேச்சு குறித்து அதிமுகவின் மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்வைத்துள்ள இந்த நேரடித் தாக்குதல், அரசியல் வட்டாரத்தில் எதிர்த்தரப்பின் போராட்டக் குரலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.