போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ என்பவர் தனது உறவினர் என்று அவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது ஆதவ் அர்ஜுனா ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
வழக்கினை தீவிரமாக விசாரித்த நீதிபதி, இந்த நஷ்ட ஈடு வழக்கிற்கு வரும் செப்டம்பர் 21-ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைத் பரப்பியதாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த இந்த வழக்கு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள புகார்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் அளிக்கப்படவுள்ள பதில் மனுவில் என்னென்ன விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளன என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
குறித்த கெடுவிற்குள் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கு அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் விரிவாக மேற்கொள்ளவுள்ளது.