முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்ததாகப் பதியப்பட்ட குற்ற வழக்கின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிற்குச் சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் திருச்சியில் அவருக்கு நெருங்கிய தொடர்புடைய 6 இடங்களில் இன்று காலை முதலே அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து, பல கோடிகளைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக எழுந்த தீவிரப் புகாரைத் தொடர்ந்து இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, வழக்கின் முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவருடைய இல்லங்கள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தச் சோதனையை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனையின் போது பல முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத நிதிப் பரிவர்த்தனை சான்றுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி சோதனை நடவடிக்கை, தமிழக அரசியல் களத்திலும் கல்வித் துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment