புதிய தலைமை செயலகத்திற்கு 1200 கோடி எதற்கு?: சசிகலா அதிரடி கேள்வி!

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் மோசமான சூழலில் இருப்பதாகவும், இந்தச் சூழ்நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ரூபாய் 1200 கோடி செலவிடுவது எனக்குச் சரியாகப் படவில்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மிகக் காரசாரமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்ட போதே, மாநிலத்தின் நிதியாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று நான் சுட்டிக்காட்டினேன். இன்று மாநிலத்தில் விவசாயப் பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன.

கால்நடைகளுக்கும் மாடுகளுக்கும் தேவையான தீவனமும் இல்லை, குடிப்பதற்குப் போதிய தண்ணீரும் இல்லை. இந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தான் அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “மாநிலத்தின் நிதி நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் போது, தேவையில்லாமல் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இது எனக்குச் சிறிதும் சரியாகப் படவில்லை” என்று அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், ஆடம்பரக் கட்டிடத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசின் போக்கைக் கடுமையாகச் சாடிய அவரது இந்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Leave a Comment