நடிகர் விஜயுடன் இணைந்து ‘திருமலை’ திரைப்படத்தில் பணியாற்றிய பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நடிகர் கருணாஸ், அவரது நற்குணங்கள் மற்றும் சமூக அக்கறை குறித்து ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
“நான் அரசியல் ரீதியாக அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் கூட, சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எங்களைப் பார்த்தவுடனே, என் மகன் ‘கென்’ எப்படி இருக்கிறான் என்று மிகவும் அன்போடு நல விசாரித்தார்” எனத் தெரிவித்தார்.
அரசியல் மற்றும் சமூகப் பணிகளுக்கு இடையே இவ்வளவு வேலை பளு இருக்கும் சூழலிலும், அவர் சினிமாவைத் தொடர்ந்து கவனித்து புதிய நல்ல திறமைகளைக் கண்டறிந்து பாராட்டி வருகிறார் என்று கருணாஸ் சுட்டிக்காட்டினார். மேலும், நடிகர் சங்கக் கட்டிடப் பணிகளுக்காக விஜய் சொந்தமாக ரூபாய் 1 கோடி நன்கொடையாக வழங்கியிருப்பதை நினைவுகூர்ந்த அவர், அவரிடம் சமூகத்திற்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற மிகச் சிறந்த நோக்கங்களும் தொலைநோக்குப் பார்வையும் இருப்பதாகத் தெரிவித்தார்.
புதிதாக அரசியல் களம் கண்டுள்ள அவருக்கு உடனடியாக அவசரப்படாமல் நாம் போதிய அவகாசமும் நேரமும் கொடுக்க வேண்டும் என்று கருணாஸ் கேட்டுக்கொண்டார்.
அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, விஜயின் பண்பட்ட குணத்தையும் நற்செயல்களையும் பாராட்டி கருணாஸ் பேசியுள்ள இந்த நெகிழ்ச்சியான கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் திரை உலக வட்டாரங்களிலும் வைரலாகி வருகிறது.