விஜய் சேதுபதி மீதான தவெகவினரின் தாக்குதல் கண்டனத்திற்குரியது: சீமான் அதிரடி அறிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே நடைபெற்ற ஒரு சாதாரண விளையாட்டுச் சூழலை அடிப்படையாக வைத்து தலைமைத்துவம் குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலவர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே தவறாகப் பொருள் கற்பித்துக்கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் என்று வெறுமனே திரைப்படம் எடுத்தால் மட்டும் போதாது; உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளை நடைமுறையில் காக்க வேண்டும்” என்று தவெகவினரின் இந்த நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட கருத்தைத் தங்களுக்கு எதிரானதாக எடுத்துக்கொண்டு ஒரு கலைஞனை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிப்பது ஜனநாயகப் பண்பாகாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திரைத்துறை மற்றும் அரசியலில் விஜய் சேதுபதியின் பேச்சு குறித்துத் தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வரும் சூழலில், அவருக்கு ஆதரவாகவும் தவெகவினரின் போக்கைக் கண்டித்தும் சீமான் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கை, தற்போது அரசியல் மற்றும் திரை உலக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Leave a Comment